Wednesday, July 14, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்


                  வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது.

      இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள்.

                 

                      தற்காலத்தில் லண்டனில் 
ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம் சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.


                     படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிமிடங்கள் போகிறது. வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழிலாளிக்கு இடையே ஏற்படும் காதலை உருவாக்க, மெல்ல,மெல்ல, அதற்கான சினிமா லாஜிக்கோடு, ஏற்படுத்தி, அவன் மீது அவளுக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல அவ்வளவு நேரம் தேவைதான் படுகிறது.
                       இதற்கிடையில் பழைய மதராசபட்டினத்தையும், ஆளும் வெள்ளைகாரர்களுக்கும், இவர்களுக்குமிடையே எழும் ப்ரச்சனை, அவர்களது வாழ்க்கை, சுதந்திரத்தை பற்றிய அன்றைய மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு, நேதாஜியை பாலோ செய்யும் குஸ்தி வாத்தியார், சுதந்திரம் வந்திட்டா மட்டும் என்ன பெரிசா கிடைச்சிரப் போவுது என்று அங்கலாய்க்கும் நொள்ளைக்கண் தகப்பன், இருக்கிற ஒரே மரத்தடி வாத்தியார், எப்பபார் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவன், பரிதியின் நண்பர் குழாமிலிருக்கும் ஊமை, தெலுங்கு பேசுபவன், ஏரோப்ளேன் போனால் குண்டு போடப்போறாங்க என்று கத்தியபடி அலைபவன், எதுவும் நடக்காது என்று அம்மா சொன்னதாக சொல்லும் பரிதியின் தங்கை, போட் ஓட்டும் தாத்தா, தீவிரவாதம் செய்யும் ஒரு குழு தலைவன், துபாஷி ஹனிபா என்று பார்த்து, பார்த்து கேரக்டர்களை நுழைத்து, சுதந்திரத்துக்கு முன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆசாபாசங்கள் என்று மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.


                        ப்ரிதியாக ஆர்யா, நிறைவான நடிப்பு, கண்களில் குறும்புடன், வாத்யார் வீட்டின் வாசலில் வந்து நின்று நன்றி சொல்வதற்கு என்ன சொல்வது என்று நண்பர்களுடன் கும்பலாய் கேட்பதும், உள்ளேயிருந்து முனகலாய் மனைவி யாருங்க என்பதும், பின்பு மீண்டும் ஒரு முறை பகலில் கதவு தட்ட, அதே முனகலுடன் மனைவி கூப்பிட, பகல்லேயேவா? என்றபடி மீண்டும் கொரஸாய் கேள்வி எழுப்புமிடத்திலும், வாத்யாரிடமே ஆங்கிலம் தப்பாய் சொல்லித்தருகிறாய் என்று பேசுமிடத்திலும், ஆக்ரோஷமாய் குஸ்தி போடுமிடத்திலும், காணாமல் போன காதலியை தேடி அலைந்து பார்த்தும் ஒரு கணம் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல் அடிக்கும் காட்சிகளிலும் அடக்கி வாசித்திருந்தாலும் மனதில் நிற்கும் ந்டிப்பு. நிச்சயமாய் ஆர்யாவுக்கு ஒரு மைல் கல் படம் இது.

                     என்னதான் ஆர்யா, பழைய மதராஸை திரும்ப காட்டியிருந்தாலும், இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம். பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டு காதலிக்க வைக்கும் முகமும், நடிப்பும் இல்லாவிட்டால் படமே விழுந்துவிடக்கூடிய அபாயம் உள்ள கதை. எமி ஜாக்ஸனின் அழகும், அவரது நடிப்பும் அவரை காதலிக்க வைக்கிறது. அவரின் முகத்தில் உள்ள ஒரு இன்னொசென்ஸே, நம்மை இன்னும் கவர்கிறது.

           நீ.....
                 கம்பனால் 
                 மறைக்க பட்ட 
                                    கவி சோலை
                 காளிதாசால் 
                 செதுக்கப்பட்ட 
                                    ஓவிய சிலை

          நீ ...
                பேசும் 
                கொஞ்சும் தமிழுக்கே 
                ஆயிரம் கவிதைகள் 
                எழுதலாம்
                                அப்படி என்றால்
                நித்தம் பேசிய 
                உன் கண்களுக்கும் 
                                 எத்தனை...? 


                       படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். லண்டனில் படம் ஆரம்பத்திலிருந்து சென்னைக்கு வந்து, மதராச பட்டனத்துக்கு போய் வருவது என்று அட்ட்காசமான விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள்.

               ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரும், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவும். பழைய செண்ட்ரல், அங்கே ஓடும் கூவம் நதி, ட்ராம்கள், கைரிக்‌ஷாக்கள், பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அந்த டோபிகானா, கார்கள், என்று ஒவ்வொன்றிலும் பார்த்து, பார்த்து செய்திருக்கிற இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.



                     படத்தில் இன்னொரு முக்கிய பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மிக அருமையான பின்னணி இசை. வாம்மா துரையம்மா, அந்த எம்.எஸ்.வி பாடல், காதல் துளிர்க்கும் அந்த உதித் நாராயன் பாடல் என்று படத்தோடு இணைந்து ரசிக்க வைக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் ஜி.வி.
இவர்கள் எல்லோருக்கும் சிகரமாய் பாராட்டப்படவேண்டியவர் இயக்குனர் விஜய். முந்தைய படங்களான க்ரீடம், பொய் சொல்லப் போறேன் போன்ற படங்களிலிருந்து முழுவதும் வேறு பட்ட கதைகளத்தை எடுத்து கொண்டிருக்கிறார்.

                      வழக்கமாய் சுதந்திர போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டு அதை பற்றி சொல்லாமல் அந்த காலத்தில் ஒரு காதலர்களுடய கதையை எடுத்துக் கொண்டு அருமையாய் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மனம் நெகிழ்ந்து வெளிவராமல் இருக்க முடியாது. நானெல்லாம் அழுது பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாய் அழுதது மலையாள “தன்மாத்ரா”வுக்குதான். மிக சின்ன கேரக்டர்களுக்கு கூட டீடெயிலிங் கொடுத்து, கடைசி வரை பரிதியை தேடி அலையும் போது அதற்கான சஸ்பென்ஸோடு திரைக்கதையை நகர்த்தி சென்றதும், முதல் பாதியில் காதலுக்கு கொடுத்த வேகத்தை இரட்டிப்பாக ஆக்‌ஷன் ப்ளாக்காக மாற்றி பரபரக்க வைத்து, குப்பென நெகிழ வைத்து மிரட்டியிருக்கிறார். இயக்குனர்.

                  இப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு பாராட்டுக்கள். ஒரு வித்யாசமான படத்தை கொடுத்ததற்காக. படத்தில் குறையாய் இருக்கிற சில விஷயங்கள் இருந்தாலும் மிக குறைவே. ஆங்காங்கே டைட்டானிக், லகான், படம் போன்ற காட்சிகள், கொஞ்சம் லெந்தான முதல் பாதி, இரண்டாவது பாதியில் வரும் முதல் பாடல் என்பது போன்ற சிறு சிறு குறைகளே.. இப்படத்தின் குழுவினரின் டெடிக்கேஷனுக்கு இதெல்லாம் சாதாரணமே.. கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு வரும் போது மனதில் நிற்கும் படம். .




ஆழமான கடலில்
அழகான காதல்
                                                                -- டைட்டானிக்
அழுத்தமான 
விடுதலை போராட்டத்தில் 
ஆழமான 
காதல் போராட்டம்  
                                                          -- மதராசபட்டினம்



2 comments:

Sathya said...

Nice review anto.. oru padam partha effect irruku :)

Sathya

Unknown said...

ivlo talent aan paiyannoda team la iruka perumiya iruku